Wednesday 24 February 2010

உயிர் என்றால் என்ன?

have already seen this
நாம் சுவாசிக்கிறோமே...அந்த காற்றுதான் உயிர் என்று சொன்னால் நீருக்குள் காற்று இல்லாமலே தண்ணீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனை சுவாசித்து மீன் உயிர் வாழ்கிறதே...அது எப்படி?

வாகனத்தில் பெட்ரோல்,டீசல்,மண்ணெண்ணெய்(?!) போன்றவற்றை ஊற்றினாலும் அது இஞ்சினில் எரிக்கப்படும்போது கிடைக்கும் சக்திதான் வாகனத்தை இயக்குகிறது.அதாவது எரிபொருட்கள் என்பவை சக்தி கிடைப்பதற்கான மூலப்பொருள். அவ்வளவுதான்.
அதே போல் மனிதனின் உயிருக்குத் தேவையான சக்தியைக் கொடுக்க காற்று, நீர் போன்றவை பயன்படுகிறது.மனிதன் உட்பட பல உயிரினங்களுக்கு காற்றும், மீன் போன்ற பல உயிரினங்களுக்கு தண்ணீரும் ஆக்சிஜனை வழங்குகின்றன.

வாகனத்தில் எரிபொருள் எரிக்கப்படும்போது கிடைக்கும் உந்து சக்தி எப்படி வாகனத்தின் சக்கரத்தை சுழலச் செய்கிறதோ அதே போல் ஆக்சிஜன் நாம் உண்ணும் உணவுகளை எரித்து கலோரிகளை சக்தியாக மாற்ற உதவுகிறது.அதாவது நம் உடலும் ஒரு அடுப்பு அல்லது வாகன இஞ்சின் என்றுதான் சொல்லவேண்டும்.

நம் உடல் என்ற அடுப்பு எப்போதும் எரிந்து கொண்டே இருந்தால் உடல் அழுகாமல் இருக்கிறது. உயிர் போய்விட்டது என்றால் சில்லிட்டுவிட்டது என்று சொல்கிறோம். அப்போது சாதாரணமாக உள்ள வெப்ப நிலையை விட நம் உடல் வெப்ப நிலை அதிகம் என்பதால்தான் உயிர் பிரிந்து அந்த அடுப்பு அணைந்ததும் உடல் அழுகத் தொடங்கிவிடுகிறது.

பனிக்கட்டி தொட்டுப்பார்க்க சில்லென்று இருந்தாலும் சராசரி வெப்ப நிலையை விட அது மிகவும் உஷ்ணமானது.அதனால்தான் ஐஸ் பெட்டியில் வைத்த உடல் கெட்டுப் போவதில்லை.உணவுப்பொருள் தன் ருசியை இழந்தாலும் வீணாவதில்லை.அதாவது ஒரு பொருள் அல்லது மனிதனை, மற்ற உயிர்களை இல்லை அந்த உடல்களை வீணாகாமல் வைத்திருக்க சராசரியைத் தாண்டிய வெப்ப நிலை தேவைப்படுகிறது. அப்போது அக்னிதான் உயிரா?

(ஆணின் உடலில் உயிரணுக்களை உற்பத்தி செய்யும் இடம் வெப்பமான உடலை விட்டு வெளியே சராசரி சீதோஷ்ண நிலையில் அமைந்திருப்பதற்கும் இப்போதுதான் அர்த்தம் புரிகிறது.)
******

2001ம் ஆண்டு தினமலர்-வாரமலரின் வேலூர், திருச்சி, சேலம், ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோயில் ஆகிய பதிப்புகளில் இந்திராசௌந்தர்ராஜன் எழுதிய தினம் ஒரு உயிர் என்ற ஐம்பது வார தொடர்கதையை நான் மிகவும் ஆர்வமுடன் படித்தேன்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் ஒரு கதாபாத்திரத்தின் டைரிக்குறிப்பாக சில தகவல்கள் இடம்பெற்றன.அதில்தான் உயிர் என்றால் அக்னி என்று சித்தராக மாறும் அரங்கநாத தேவரின் கூற்றாக இடம்பெற்றிருந்தது. அறிவியல் ரீதியாக பார்த்தாலும் இது ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தான்.இதை அடிப்படையாக வைத்துதான் இந்த கட்டுரையை எழுதினேன்.

அந்த தொடர்கதை திருமகள் நிலையத்தின் வெளியீடாக வந்த பிறகும் நூலகத்தில் பல முறை படித்திருக்கிறேன்.ஐம்பது துணுக்குகளில் இதுதான் என் மனதில் மிக ஆழமாக பதிந்த செய்தி.

அதன் பிறகு சிவலிங்கம் பற்றிய அரிய தகவல்களுடன் சிவம் என்ற கதையும் அடுத்த ஒரு ஆண்டுக்கு தொடராக வெளிவந்தது.அதையும் விடாமல் வாசித்திருக்கிறேன்.பாலகுமாரனின் உடையார் என்ற பிரமாண்ட நாவலின் எல்லா தொகுப்புகளையும் வாசிக்க பொன்னியின் செல்வன் போலவே சிவமும் ஒரு காரணம்.

இப்போது கூட இந்திராசௌந்தர்ராஜன் மேலே சொன்ன தினமலர்-வாரமலரின் ஆறு பதிப்புகளில் மாயமாய் சிலர் என்ற தொடர்கதையை எழுதி வருகிறார்.ஆனால் அது தினம் ஒரு உயிர், சிவம் நாவல்கள் போல என்னைப் புரட்டிப்போடவில்லை.நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணனின் ஓவியங்களுடன் இந்த தொடர் மிகவும் அதிகமான விளம்பரத்துடன் தொடங்கியது.

ஓவர் பில்ட் அப் கொடுத்தால் சினிமாவாக இருந்தாலும் தொடர்கதையாக இருந்தாலும் மக்கள் மனதை கவரும் அளவுக்கு விஷயம் இருக்காதோ?
******

4 comments:

Chitra said...

ஓவர் பில்ட் அப் கொடுத்தால் சினிமாவாக இருந்தாலும் தொடர்கதையாக இருந்தாலும் மக்கள் மனதை கவரும் அளவுக்கு விஷயம் இருக்காதோ?

...........ம்ம்ம்ம்ம்ம்ம்.......அப்படியெல்லாம் பேசப்படாது.

இடுகை நல்லா இருக்குங்க.

ராமலக்ஷ்மி said...

இடுகை நன்று.

உங்கள் அபிமான எழுத்தாளராக இருக்கவே அவரது படைப்புகளிலிருந்து பலவற்றைப் பகிர்ந்தும் வருகிறீர்கள். மனதைக் கவராதென் முதலிலேயே முடிவு செய்து விட்டால் எப்படி:)?

திருவாரூர் சரவணா said...

வணக்கம் மேடம்.
ஒருவர் அபிமான எழுத்தாளர் என்பதற்காக அவரது எல்லா எழுத்தையும் பாராட்ட வேண்டும் என்று இல்லையே.ஒரு வேலை சாப்பிட்டால் போதாது. தினமும் மூன்று வேலையும் உயிர் வாழ உணவு தேவைப்படுகிறதே.அதே போல் அவரிடம் தொடர்ந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்.அவ்வளவே...

மாயமாய் சிலர் கதையை தொடர்ந்து படித்து வரும் பலரிடம் கேட்டுப்பார்த்தேன். அவர்களிடமிருந்தும் இதே பதில்தான்.அவரது பல கதைகளை விடாமல் படித்திருக்கிறேன்தான். ஆனால் இப்போது பத்து வாரங்களாக இந்த கதையில் ஒரு பிடிப்பு ஏற்படவில்லை. அவரது மற்ற கதைகளில் முதல் வாரம் முதலே நாங்கள் அவரது பிடிக்குள் சென்று விடுவோம்.இப்போது இன்னும் வெளியில்தான் நிற்கிறோம்.

ரஜினியிடம் பாட்ஷா மாதிரியான படத்தை எதிர்பார்க்கும் ரசிகன் பாபாவைப் பார்த்து ஏமாற்றமடைந்தது போல் என்று சொல்லலாம். இது என்னுடைய பார்வை.

ஒரு துறையில் ஐந்து வல்லுனர்கள் இருந்தால் ஆறு கருத்துகள் அங்கே தோன்றும் என்று சொல்வார்கள். சாதாரண மனிதர்களிடம் ஆறு என்ன, ஆறாயிரம் கருத்துகள் தோன்றலாம்.(அதில் எவ்வளவு ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்பது வேறுவிஷயம்)

ராமலக்ஷ்மி said...

உண்மைதான். ஆனால் தொடர் ஆரம்பித்து சிலகாலம்தானே ஆகின்றது. பொறுத்திருந்து பார்க்கலாமே என்றேன். அதிகம் அவர் எழுத்துக்களை வாசிக்க வாய்ப்பு கிடைக்காவிடினும் முன்னர் தொடராக வந்த சில டிவி சீரியல்கள் பார்த்துள்ளேன். இப்போது உங்கள் பதிவுகளில் சில பகிர்வுகள் பார்த்தேன்.

//மாயமாய் சிலர் கதையை தொடர்ந்து படித்து வரும் பலரிடம் கேட்டுப்பார்த்தேன். அவர்களிடமிருந்தும் இதே பதில்தான்.அவரது பல கதைகளை விடாமல் படித்திருக்கிறேன்தான். ஆனால் இப்போது பத்து வாரங்களாக இந்த கதையில் ஒரு பிடிப்பு ஏற்படவில்லை. அவரது மற்ற கதைகளில் முதல் வாரம் முதலே நாங்கள் அவரது பிடிக்குள் சென்று விடுவோம்.இப்போது இன்னும் வெளியில்தான் நிற்கிறோம்//

அப்படியா? வாசிக்காமல் எனக்கும் கருத்து கூறமுடியாதுதான்.விரிவான கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

Post a Comment