Friday, 19 February 2010

இந்திய பாரம்பரியம்-கோலம் தந்த ஆச்சர்யம்

have already seen this
வெளிநாட்டைச் சேர்ந்தவர் அந்தப்பெண்மணி.உலகைச்சுற்றி வருவதும், பல நாடு, பல மொழி பலவித கலாச்சாரங்களை அறிந்து கொள்வதும் அவருக்கு விருப்பமான செயல். இந்தியா வந்த அந்த பெண்மணி நமது நாட்டின் பன்மொழி கலாச்சாரத்தைப் பார்த்து முதலில் அதிர்ந்தார்.பிறகு ஆச்சர்யப்பட்டார். அனைத்திற்கும் மேலாக இந்திய மண்ணின் ஆன்மீகச் சிறப்பை அவரால் நுட்பமாகவே உணர முடிந்தது. பலவித புராணங்கள், இதிகாசங்கள் என்று ஏராளமான இலக்கியங்கள் மண்டிக்கிடப்பதை பார்த்தவருக்குள் ஒரு உண்மை தெளிவாகப்புலனாயிற்று.

எவ்வளவு நீண்ட ஒரு பாரம்பரியம் இருந்திருந்தால் இது சாத்தியப்பட்டிருக்கும் என்பதுதான் அது!நீண்ட பாரம்பரியம் உள்ள ஓர் இடத்தில் நிச்சயம் ஒரு நல்ல தெளிவிருக்கும்.ஏராளமான சான்றோர் பெருமக்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் தோன்றி மறைந்திருப்பார்கள்.அவர்களின் வாழ்க்கைப்பதிவுகள் வழிகாட்டிகளாக இருக்கும்.

சுருக்கமாக சொல்லப்போனால், கிட்டத்தட்ட முதல் மனிதன் வாழ்ந்த அந்த நாள் வரை கூட இவர்களைக்கொண்டே எட்டிப்பார்க்க நம்மால் இயலக்கூடும்.

அந்தப்பெண்மணி மிகச் சரியாகவே நமது கலாச்சார சிறப்புகளை ஆராயத் தொடங்கினார்.அவருக்கு பிரமிப்புகளும் ஏற்பட ஆரம்பித்தன!
******
அந்த வெளிநாட்டுப் பெண்மணி முதலில் வியந்தது, நமது வீடுகளின் முன்னால் தினமும் காலையிலும் மாலையிலும் நீர் தெளித்து கோலமிடும் பழக்கத்தைதான்.அது ஒரு மங்கலச் செயலாக அவருக்கு கூறப்பட்டது.ஆனால், கோலமிடுவதில் மங்கலம் மட்டுமல்ல.பெண்களுக்கான உடல்ஆரோக்கியம் மற்றும் எதையும் திட்டமிட்டு செய்யும் சாதுர்யம் இவை ஒளிந்திருப்பதை அவருக்கு விளக்கியபோது அவர் வியப்பின் உச்சிக்கே போனார்.
வாசலில் சாணி தெளித்து சுத்தம் செய்வதால் கிருமிகள் அண்டுவதில்லை.அதன் மேல் சூரிய ஒளி படும்போது ஜீவ வாயுக்கள் உருவாகின்றன.அதோடு அரிசி மாவால் புள்ளிகள் வைத்து கோலமிடுவது கணக்கு போடுவது போல ஒரு செயல்.அது மறைமுகமாக திட்டமிட்டு எதைச் செய்தாலும் அது அழகாக முடிந்து மனதுக்கும் நிறைவைத்தரும் என்கிற ஓர் உண்மையை ஆழ்மனதில் புதைக்கிறது.அனைத்திற்கும் மேலாக கட்டை விரலும், ஆள்காட்டி விரலும் ஒன்று கூடி கோலமாவை எடுத்து வளைந்து நெளிந்து கோலம் போடும்போது உடம்பும் பலமுறை குனிந்து நிமிர்ந்திட அதுவே மறைமுகமாக ஒரு யோகாசனப்பயிற்சி போல அமைந்துவிடுகிறது.

இறுதியாக கோலமாவுத் துணுக்குகளை மறு தினத்துக்குள் பல எறும்புகள் தங்களுக்கான உணவாக கருதி எடுத்துச் சென்று விடுவதால் வீட்டு வாசல் என்பது கலா ரூபம், சுகாதாரம், உயிர்களுக்கு உதவும் அன்னக்கூடம் என்று மூன்று விதத்தில் சிறப்படைகிறது.வீட்டு வாசலிலேயே இவ்வளவு சிறப்புகள் அமைந்தால் வீட்டினுள் எவ்வளவு சிறப்புகள் இருக்கும்?

ஆச்சர்யங்கள் தொடரும்...
******
படங்களில்  இருக்கும் கோலங்களை வரைந்த சகோதரி, திருப்பாம்புரம் கோயிலில் அர்ச்சகராக இருக்கும் என் நண்பர் வி.ஜி.எஸ் அவர்களின்  மனைவி.

4 comments:

Chitra said...

அழகான கோலங்கள், இடுகை. வாழ்த்துக்கள்.

dondu(#11168674346665545885) said...

பதிவிடும்போது எடிட்டரில் double-side justified வேண்டாம், அதை எடுத்து left-justified மட்டும் வைத்து கொள்ளவும். இல்லாவிட்டால் பலரது கணினியில் ஒருங்குறி தமிழ் எழுத்துகள் உடைந்து தென்படுகின்றன, முக்கியமாக Direfox உலாவி பாவிப்பவர்களுக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

திருவாரூர் சரவணா said...

@ டோண்டு ராகவன்

தங்களின் மேலான ஆலோசனைக்கு நன்றி. சீர் செய்து விட்டேன். இப்போது நன்றாகத்தான் இருக்கிறது.

ராமலக்ஷ்மி said...

கோலமிட்ட கைகளைப் பற்றி என் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன். அனைத்தும் அழகு.

நல்ல பதிவு.

Post a Comment